தயாரிப்பாளர் பரிசளித்த காரை திருப்பி கொடுத்த ‘லவ் டுடே’ பிரதீப்.. அவர் சொன்ன காரணம் தெரியுமா?
2019ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. பள்ளி கூடத்தில் படிக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா வரை சென்று தனது வாழ்க்கையில் 16 வருடம் கோமாவில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை சுவாரசியமாக சொல்லியிருப்பார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக கூறியுள்ளனர்.
காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இப்படம் தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இந்நிலையில், கோமாளி பட வெற்றிக்கு பின் அவருக்கு தயாரிப்பாளர் பரிசாக கொடுத்த காரை அவர் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. கோமாளி படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அவருக்கு புது கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.
அந்த கார் இருந்தால் அதற்கு பெட்ரோல் போடவே நிறைய பணம் செலவாகும் என்பதால், அதனை திருப்பி கொடுத்து அந்த காருக்கான தொகையை தனக்கு பரிசாக கொடுத்தால், தான் அடுத்த படம் எடுக்கும் வரை அது எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என கேட்டாராம் பிரதீப். அவர் கூறிய இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.