தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பொன்னியின் செல்வன் பட போஸ்டர்கள்..

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.
மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
படத்தின் சிறப்பு சப்தம், பின்னனி ஓசைகள் (Foley), ரீ ரெக்கார்டிங் ஆகியவை நுங்கம்பாக்கம் ரிவர் ரெக்கார்ட்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியப் பகுதி சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷனை தஞ்சாவூரில் இருந்து தொடங்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. டீசரை ஜூலை முதல் வாரத்தில் பிரமாண்டமாக வெளியிடுவதற்கான தயாரிப்பில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில், படத்தின் டீசர் வெளியீட்டிற்குப் பிறகு ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு உலக சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் டீசர் வெளியிடப்படும் என சமீபத்திய தகவல்கள் வெளியானது. பின்னர் அது கைவிடப்பட்டது.
‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதே நேரத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திட்டத்தின் 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது. கடந்த வாரம், பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டது. அதன்படி அப்படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘வருகிறான் சோழன்’ என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், முக்கிய அப்டேட் எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அதனைத் தொடர்ந்து, முக்கிய கதாபாத்திரங்களின் பெயருடன் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் போஸ்டர் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விக்ரம் நெற்றியில் நாமமிட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் “சோழர்கள் சுத்த சைவர்கள், அதுமட்டுமின்றி சிவ பக்தர்கள், அவர்கள் எப்படி நாமமிட்டிருப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபுறம் இது நாமம் இல்லை வெற்றித்திலகம் எனவும் ஒரு தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது.
படத்தின் கதைப்படி ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் தான் விக்ரம் நடித்துள்ளார். ஆனால் படக்குழு அவரது பெயரை ஆதித்ய கரிகாலன் என குறிப்பிட்டுள்ளது. ஆதித்த என்பதற்கு பதிலாக ஆதித்ய என்று வடமொழிச் சொல்லை பயன்படுத்தி தமிழை கொச்சைப்படுத்தி உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மேலும், இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள கொடியும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இதன் போஸ்டரில் காவி நிறக் கொடி இடம்பெற்றுள்ளது. ஆனால் சோழர்கள் சிவப்பு நிறக் கொடியைத் தான் பயன்படுத்தியதாகவும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். மேலும், சோழர்கள் கொடியில் புலி படம் இருக்கும். அதுவும் இல்லை என சொல்லப்பட்டு வந்தது.
இதே போல ஜெயம் ரவியின் போஸ்டரில் அருள் மொழி வர்மன் என்பதற்கு பதிலாக அருண் மொழி வர்மன் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். மணிரத்னத்திடம் தமிழ் தெரிந்த உதவி இயக்குனர்கள் இல்லையா? பொன்னியின் செல்வன் நாவலை முழுவதுமாக படித்து உதவி செல்வன் இல்லையா என்பது தெரியவில்லை? மக்கள் மனதில் ஆழப்பதிந்த ஒரு நாவலைப் படமாக்கி அது பற்றிய அறிமுகங்களை வெளியிடும் போது தவறுகளைப் பார்ப்பது இயக்குனரின் வேலைதானே என்று வருத்தப்படுகிறார்கள். இவ்வளவு கவனக்குறைவாக போஸ்டர்களிலேயே இப்படி தவறு என்றால் படத்தில் என்ன செய்திருப்பார்கள்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.