சோழ மன்னர்கள் இப்டி இருக்க மாட்டாங்க.. நோட்டீஸ் வரை சென்ற விவகாரம்.. போட்டோ ஆதாரத்துடன் வைரல்..

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் போஸ்டர் வெளியிட்டது.
இப்படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் வந்தியதேவனாக நடித்த கார்த்தி பாடல் முழுவதும் தோன்றுகிறார். இந்த பாடலை ஏ.ஆர் ரகுமான் பாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது சிங்கிள், ‘சோழா சோழா’ வரும் ஆகஸ்ட் 19ம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் மீது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார்.
படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குனர் மணிரத்னம், விக்ரம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது வக்கீல் அனுப்பிய நோட்டீஸில் கூறி இருப்பது, அமரர் கல்கியின் பிரபலமான நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது பொன்னியின் செல்வன் திரைப்படம்.
தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களின் வரலாற்றின் அடிப்படையில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் உருவாக்கி இருக்கிறார். சோழர்களின் வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லை.
ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்திய கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் நெற்றியில் நாமம் இடப்பட்டு உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இதேபோல இன்னும் எத்தனை வரலாறுகள் மறைத்து உள்ளார் என்பதை படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள், ‘சோழா சோழா’ குறித்து வெளியிடப்பட்டுள்ள விக்ரமின் போஸ்டரில் அவரது நெற்றியில் திருநீர் பட்டை பூசப்பட்டு இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது படக்குழு.