பொன்னியின் செல்வன் பட பிரபலம் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் !
தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரகுமான் மூலம் அறிமுகமானவர் பாடகர் பம்பா பாக்யா. இவர், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். ராவணன் படத்தில் இருந்து பாடி வரும் இவர், சர்கார் படத்தில் இடம்பெற்று பிரபலமான சிம்ட்டங்காரன் பாடல் மூலம் மிக பேமஸ் ஆனார்.
இதன்பின், எந்திரன் 2.0 திரைப்படத்தில் இவர் குரலில் வெளியான புள்ளினங்காள் பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பின்னர், அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் இடம்பெறும் காலமே காலமே, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பொன்னி நதி என்கிற பாடலில் கூட ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்து பாடி இருந்தார் பம்பா பாக்யா.
இப்பாடல் தற்போது பட்டிதொட்டியெங்கும் வைரல் ஹிட்டாகி உள்ளது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பாடகர் பம்பா பாக்யா இன்று காலமானார். அவருக்கு வயது 49.
பாடகர் பம்பா பாக்யாவின் மரணம் கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.