OTTயில் ரிலீஸாகும் நயன் - விக்கி திருமண வீடியோ.. வெளியான ரொமான்டிக் டீசர்!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், நயன்தாரா சொந்த ஊரான கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியது. இதனிடையே, நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு விஷயத்தில் இருந்து அதிரடியாக netflix பின்வாங்கிவிட்டதாக தகவல் வெளியானது. திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்பட்டது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் கடற்கரை போட்டோஷூட் புகைப்படங்களை netflix தனது அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவிட்டது. இதனால், விரைவில் இவர்கள் திருமண ஒளிபரப்பை netflix விரைவில் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான பணிகளை கவனிக்கும் பொறுப்பு இயக்குனர் கவுதம் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், நயன்தாரா திருமணத்தின்போது எடுத்த வீடியோ காட்சிகள் அடங்கிய புரோமோவை முதன்முறையாக வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ். அந்த வீடியோவில் நயன் மற்றும் விக்கி பேசும்படியான காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்கி உள்ளார் என்பதையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.