'இந்த சீன் என் வாழ்கைல உண்மையா நடந்தது' மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த அவமானம்!
பிரபலம் இயக்குனர் ராம் அவர்களின் துணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், தனது இயக்கத்தில் எடுத்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய திரைப்படம் கர்ணன். கர்ணன் பட வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறிய மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் மாமன்னன். இவரது முதல் இயக்கமான பரியேறும் பெருமாள் திரைப்படம் இன்றளவும் வரவேற்பை பெற்று வருகிறது.
கதிர், ஆனந்தி, யோகி பாபு, தெருக்கூத்து கலைஞர் தங்கராசு என பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை நல்ல வரவேற்பு பெற்றது. பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன் இப்படத்தை தயாரித்திருந்தது. ஜாதி பாகுபாடு, ஜாதிவெறியின் கொடூரம், ஒடுக்கப்பட்டவர்களின் மீது மிக நுணுக்கமாக நடத்தப்படும் வன்முறை, அந்த வன்முறையால் ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் அழியாத வலி என அத்தனையும் எடுத்துரைக்கும் திரைப்படமாக அமைந்தது பரியேறும் பெருமாள்.
இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாகவே இருந்தது. மேலும் இப்படமானது சிறந்த படத்திற்கான விருதுகளையும் பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த ஜி.மாரிமுத்து பிரபல பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டியில் “பரியேறும் பெருமாள்” படத்தில் கதாநாயகனான கதிரை அழைத்து அடித்து அவமானப்படும் ஒரு காட்சிக்கு எப்படி மனரீதியாக தயாராகியிருந்தீர்கள் என்று செய்தியாளர் நடிகர் ஜி.மாரிமுத்துவை கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த அவர் அந்த காட்சியை எடுக்கும் போது மட்டும் இயக்குனர் ஒரு மிருகம் போல இருந்தார். தூத்துக்குடி - திருநெல்வேலி இடையில் கருங்குளம் என்று ஊரில் தான் அந்த காட்சியானது எடுக்கப்பட்டது. இக்காட்சி விடிய விடிய எடுக்கப்பட்டது. இந்த காட்சியில் கதிர் தன்னுடைய காதலி வீட்டில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள பக்கத்துவீட்டாரிடம் சட்டையை வாங்கி போட்டுகொண்டு ஒரு பரிசுசூடன் வருவார். ஆனால் காதலி வீட்டில் இருப்பவர்கள் இவரை அடித்து அவமானப்படுத்தி முகத்தில் சிறுநீர் கழுத்து அசிங்கப்படுத்துவது தான் அந்த காட்சி என்று எங்களிடம் முதலிலேயே கூறிவிட்டார் இயக்குனர்.
ஆனால் அந்த காட்சி எடுக்கும் போது அனைவரையுமே இயக்குனர் மாரி செல்வராஜ் திட்டி கொண்டு கோவமாகவே இருந்தார். நானும் அவரிடம் சென்று என்ன? சார் என்ன ஆச்சு? ஒரே கோவமாகவே இருக்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. அவர் கூறியதாவது `இல்லை சார் இந்த காட்சி என்னுடைய உண்மையான வாழ்கையிலேயே நடந்திருக்கிறது என்று கூறினார். அப்போது நான் புரிந்து கொண்டேன் இவரும் இப்படத்தில் வரும் கதிரை போல காதலி வீட்டிற்கு சென்று அவமானப்படுத்தப்பட்டுள்ளார் என்று. எனவே நானும் இந்த காட்சியில் நன்றாக நடிக்க வேண்டும் என்று நடித்திருந்தேன் என்று பல சுவாரசியமான நிகழ்வுகளை அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார் நடிகர் ஜி. மாரிமுத்து.