விக்ரம் பட க்ளைமாக்ஸ்ல சூர்யா மட்டுமில்ல.. கார்த்தியும் நடிச்சருக்கார்.. இத கவனிச்சீங்களா?

கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.
கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.
பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.
பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.
விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுது.
அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. விக்ரம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 300 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்றது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது.
விரைவில் இப்படம் OTT தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், விக்ரம் படத்தில் சூர்யா மட்டுமல்ல கார்த்தியும் நடித்துள்ளார் என தகவல் செம வைரலாக வலம் வருகிறது. மேலும், கைதி 2 படத்தில் கார்த்தி - சூர்யா மோதலை விக்ரம் படத்திலேயே கார்த்தி கன்ஃபார்ம் செய்துள்ளார் எனவும் தகவல் வேகமாக பரவி வருகிறது.
விக்ரம் படத்தில் இந்த சீனை கவனித்திருந்தால் கார்த்தி - சூர்யாவின் மோதலை தெரிந்திருக்க முடியும். சூர்யா வரும் அதே க்ளைமாக்ஸ் சீனில் தான் கார்த்தியும் நடித்துள்ளார். சூர்யாவிடம் பேசும் ஹரிஷ் உத்தமன் மற்றும் அர்ஜுன் தாஸ், திருச்சியில் நடந்த சம்பவத்திற்கு காரணம் ஜெயிலில் இருந்து வந்த கைதி தான். அவன் பெயர் டில்லி என கூறுவார்கள்.
டில்லியின் பெயரை சொன்னதும் அடுத்த ஷாட்டில், கைதி படத்தில் கார்த்தியின் மகளாக வரும் சிறுமி மற்றும் லாரி க்ளீனராக வரும் தீனாவிடம், இந்தியில் ஒருவர் பேசும்போது, அந்த சமயத்தில் குடிசைக்குள் இருந்து, “பெற்ற தாய் தனை தாய் மறந்தாலும்..” என்ற திருவருட்பா பாடலை கார்த்தி பாடுவது போன்ற ஒலி கேட்கும்.ஆனால் அவர் காட்சியில் தோன்றியிருக்க மாட்டார்.
ஆனால் இந்த குரலுக்கே தியேட்டரில் ரசிகர்களின் விசில் பறந்தது. இந்த சீனில் இருந்து தான் கைதி 2 ஆரம்ப போகிறது. சூர்யா - கார்த்தியின் மோதலும் ஆரம்பிக்க போகிறது என்று தெரிகிறது.