பிக் பாஸ் 8-ல் தொகுப்பாளர் விஜய் சேதுபதி?.. கிட்டத்தட்ட எல்லாமே உறுதி.. ஆனா ஒரேயொரு டிவிஸ்டு..!
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் முக்கிய நபராக திகழ்ந்த கமலஹாசன் பிக் பாஸ் பயணத்திலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருந்தார். இதை அடுத்து, பிக் பாஸ் அடுத்த சீசனை தொகுத்து வழங்கும் பிரபலம் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஒவ்வொரு பிக் பாஸ் ரசிகர்களின் மனதிலும் எழுந்தது.
கடந்த ஏழு சீசன்களை பொறுத்தவரை கமல் பங்கு பெறாத சில பிக்பாஸ் எபிசோடுகளை நடிகர் சிம்பு மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடத்தி இருந்தனர். ஆகவே அடுத்த சீசனை அவர்கள் தான் தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியானது. இதனிடையே, நடிகர் சரத்குமார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாகவும் கூட செய்திகள் வெளியானது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக தற்போது கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் சேதுபதி நிறைய படங்களை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த படங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி தேதி ஒதுக்கி கொடுப்பது என்பது குறித்து தனது குழுவுடன் யோசித்து வருவதாகவும், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை 2, காந்தி டாக்ஸ், ஃபார்ஸி 2 உள்ளிட்ட அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளது.
இந்த படங்களுக்கான கால்ஷூட் தேதிகள் ஏற்கனவே ஒதுக்கி இருப்பதால், அதை எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக மாற்றிக் கொடுப்பது என விஜய் சேதுபதி குழப்பத்தில் இருக்கிறாராம். இந்த குழப்பம் தீர்ந்து ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக அறிவிக்கப்படுவார் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றன.