21 ஆண்டுகளுக்கு பின் தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஜோதிகா!
நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட பிரபல ஜோடி சூர்யா - ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.
2006ம் ஆண்டு இவர்கள் திருமணத்திற்கு முன்னர் இணைந்து நடித்து வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இருவீட்டாரின் பெயரில் சம்மதம் பெற்று திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்து வருகிறார் ஜோதிகா.
திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் நடித்தார்.
இவர் அடுத்ததாக மலையாளத் திரையுலகில் மோகன்லாலுக்கு ஜோடியாக ஜோ பேபி என்ற இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. மம்முட்டியுடன் ‘காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் என்பதும், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 21 ஆண்டுகள் கழித்து நடிகை ஜோதிகா இந்தி திரையுலகில் ரீ என்ட்ரி ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2001ம் ஆண்டு ’லிட்டில் ஜான்’ என்ற இந்தி படத்தில் நடித்த ஜோதிகா அதன்பின் 21 ஆண்டுகள் கழித்து தற்போது ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நாயகியாக ஜோதிகாவை நடிக்க படக்குழுவினர் அணுகியதாகவும், அதற்கு ஜோதிகா சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா கேரக்டரில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார், துஷார் இத்ராணி இந்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.