"நான் முதல்ல 'வாரிசு' படம் தான் பார்க்க போறேன்".. 'துணிவு' பட இயக்குனர் எச். வினோத் அதிரடி பதில்
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் தொடர்ந்து விஜய் - அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும்.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே.
2023ம் வருடம் பொங்கலுக்கு அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மோத உள்ள நிலையில், இதுகுறித்து விஜய் என்ன சொன்னார் என்று பிரபல நடிகர் ஷாம் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அதே போல், அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எச்.வினோத் 3வது முறையாக இயக்கி அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ஹார்டிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இரு திரைப்படங்களின் ப்ரோமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துணிவு படத்திற்காக இயக்குனர் எச். வினோத் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் படத்தை பற்றியும், அஜித்தை பற்றியும் பல சுவாரஸ்யான விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் முதலில் துணிவு படத்தை பார்ப்பீர்களா அல்லது வாரிசு படத்தை பார்ப்பீர்களா என்று இயக்குனர் எச். வினோத்திடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த எச். வினோத் ‘ நான் வாரிசு படத்தை தான் பார்ப்பேன். படத்தின் இயக்குனராக துணிவு படத்தை பல முறை பார்த்துவிட்டேன். பார்க்காதது வாரிசு தான். அப்போ அதை தான் பார்க்க முடியும் ‘ என்று கூறியுள்ளார்.