அழுத்தமான திரைக்கதை.. மனதை உலுக்கும் காட்சிகள்.. கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் 'கார்கி'.. விமர்சனம் இதோ !
தென்னிந்திய திரையுலகத்தில் முன்னணி நடிகைகள் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் சாய் பல்லவி, சமீபத்தில் ‘விராடபர்வம்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் காளி வெங்கட், சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் கார்கி. இத்திரைப்படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் ஜூலை 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது. கோவிந்த் வசந்த் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘கார்கி’ படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்ட நிலையில், தற்போது இப்படம் குறித்த விமர்சனங்கள் வெளியாகத் துவங்கியுள்ளது.
அந்த வகையில், சமூகத்தில் அவ்வபோது அரங்கேறி வரும் முக்கிய பிரச்சனையை இப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. ‘கார்கி’ படத்தை எதார்த்தமாக, மிகவும் இயல்பாக இயக்குனர் இயக்கியுள்ளார். குறிப்பாக நாளுக்கு நாள் பெண்கள் முதல் குழந்தைகள் வரை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை இப்படம் பேசியுள்ளது.
4 வடமாநில இளைஞர்களால் 9 வயது குழந்தை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார். அந்த வழக்கில் பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் தந்தை சிக்கி கைதாகிறார். இதனால் ஒரு நடுத்தர குடும்பம் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளுகிறது, எப்படிபட்ட மன உளைச்சல்களுக்கு ஆளாகிறது ஆகிய அனைத்தையும் கடந்து தன்னுடைய அப்பாவை சாய் பல்லவி சட்ட ரீதியாக நிரபராதி என நிரூபித்து, காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
துளியும் மேக்அப் இல்லாமல் சாய்பல்லவி கச்சிதமாக இந்த திரைக்கதைக்கு ஏற்ப கதாபாத்திரத்தில் பொருந்தியுள்ளார். காளி வெங்கட் இப்படத்தில் வழக்கறிஞராக தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மொத்தத்தில் கார்கி அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
கார்கி படம் குறித்த ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..