'லைகர்' ஜெயம் ரவி பட ரீமேக்கா? விஜய் தேவரகொண்டாவின் வைரலாகும் பேட்டி !
சின்னத்திரை சீரியல் இயக்குனராக தனது கலை பயணத்தை தொடங்கிய விஜய் தேவரக்கொண்டா, Nuvvila என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். Life is Beautiful, Yevade Subramanyam போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.
பின்னர், Pelli Choopulu என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பெரும் பிரபலம் அடைந்தார். இப்படத்திற்காக பல விருதுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து, Ye Mantram Vesave, நோட்டா, World Famous Lover, Dear Comrade, கீதா கோவிந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது, சமந்தாவுடன் குஷி, பூஜா ஹெக்டேவுடன் Jana Gana Mana, Liger போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் Liger திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்து வருகிறார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது.
இயக்குநர் கரண் ஜோஹர், புரி ஜெகநாத், நடிகை சார்மி தயாரித்துள்ளனர். இதுதவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். லைகர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில், இப்படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய விஜய் தேவரகொண்டாவிடம், ‘இது ஜெயம் ரவி, அசின் நடித்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் ரீமேக்கா?’ என்று கேட்கப்பட்டது.
இதை மறுத்த விஜய் தேவரகொண்டா, ‘குத்துச் சண்டைக் கதை என்பதால் அப்படி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அந்தப் படத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. இரண்டும் வேறு வேறு. அம்மா சென்டிமென்ட் உண்டு என்றாலும் இது வேறு கதை. நான் எப்போதும் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன். ரீமேக்கை நான் விரும்புவதும் இல்லை’’ என்றார்.