'நயன் நடிப்பில் 'கனெக்ட்' வெளியாவதில் சிக்கலா?' விக்னேஷ் சிவன் பதில்
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய், சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கனெக்ட்.
படத்தின் டீசர், ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஹாரர் ஜர்னரில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், 95 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக்கொள்ள அவரை அதில் இருந்து எப்படி மீட்கிறார் நயன்தாரா என்பதை பரபரப்பான காட்சிகளுடன் காட்டியுள்ளார் இயக்குனர்.
இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. இதில் படத்தின் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கலந்து கொண்டனர். இதில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு விக்னேஷ்சிவன் பதிலளித்தார்.
இத்திரைப்படம் இடைவேளை இல்லாமல் வெளியாக இருக்கிறது. இதனால், இடைவேளையில் திரையரங்குகளில் கேண்டீன் வியாபாரம் பாதிக்கப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியானது. அதில், ‘கனெக்ட்’ படத் திரையிடலுக்கு சிக்கல் எழுந்தததா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, ‘இடைவேளை இல்லாமல் இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘கனெக்ட்’. 300க்கும் அதிகமான திரையரங்குகள் கிடைத்திருக்கிறது. திரையரங்க உரிமையாளர்களிடம் இடைவேளை இல்லை என்பது குறித்து முன்பே சொல்லிதான் அனுமதி வாங்கி இருந்தோம். சிலர் மட்டும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு மட்டும் இடைவேளை என்பதை சொல்லி இருக்கிறோம். மற்றபடி படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை’ என விக்னேஷ் சிவன் தெரிவித்திருக்கிறார்.