மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. தமிழகத்தில் தியேட்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவித்த சுகாதாரத்துறை..!
கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை கொரோனா பரவல், ஊரடங்கு என பலவற்றையும் உலக நாடுகள் சமாளித்து வருகிறது. குறிப்பாக கொரோனா முதல் அலை, இரண்டாம் அலைகள் தாக்கம் மிக கொடுமையானது.
எண்ணற்ற உயிரிழப்புகள், வேலை இழப்புகள், கல்வி பாதிப்பு, தொழிற்சாலைகள் மூடல், சிறு குறு வணிக நிறுவனங்கள் பாதிப்பு என அனைத்து தட்டு மக்களுக்கும் இந்த கொரோனா பெருந்தொற்று பாதிப்பு பல்வேறு விதத்தில் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அனைவரது மத்தியிலும் சற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு போடப்படுமோ என்கிற பயமும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி மக்கள் அதிகம் கூடும் இடமான சினிமா தியேட்டர்களில் மாஸ்க் அணிவது அவசியம் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் பேசியதாவது, தமிழகத்தில் கொரோனா பரவல் மிதமாகவே உள்ளதால் அதிரடி கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிவதை மட்டும் சில இடங்களில் கட்டாயமாக்கி வருகிறோம். முதலில் மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது தியேட்டர்கள், ஏசி வசதி உள்ள அரங்குகள், கலையரங்கம் போன்றவற்றில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.