'தளபதி67' படத்தில் பணிபுரிய கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பு? கோவை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு!
2019ம் ஆண்டு மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், தீனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் செம ஹிட் அடித்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
முற்றிலும் மாற்றுப்பட்ட கதைகளத்துடன் அக்ஷன் திரைப்படமாக வெளியான கைதி மெகா ஹிட்டான நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிக பிரபலம் அடைந்தார். கைதி விஜய் படமான பிகில் திரைப்படத்துடன் வெளியானலும் 100 கோடியளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
பின்னர், விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ், தற்போது கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். கைதி படத்தின் reference வைத்து மினி லோகேஷ் யூனிவெர்ஸ் ரெடி செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். மேலும், விக்ரம் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை லோகேஷ் பெற்றார்.
பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான். படத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூ. 350 கோடியை கடந்தது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்தார் கமல் ஹாசன்.
விக்ரம் பட வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தை இயக்க உள்ளார். இதை முடித்த பின் விக்ரம் படத்தின் 3ம் பாகம், கைதி படத்தின் 2ம் பாகம் மற்றும் சூர்யாவுடன் இரும்புக்கை மாயாவி என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், இவரை முன்னிறுத்தி போதைப்பொருள் தடுப்பு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது கோவை மாநகராட்சி காவல்துறை. தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தமிழக காவல் துறை தீவிரமாக எடுத்து வரும் நிலையில் கோவை மாநகர காவல் துறை மற்றும் தனியார் நிறுவனம் ஒன்று இணைந்து குறும்படப் போட்டியை அறிவித்து உள்ளது.
’போதை தடுப்பு விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் 3 முதல் 5 நிமிடங்கள் வரையிலான குறும்படங்களை அக்டோபர் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் மட்டும் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக மாவட்டங்களில் போதைப்பொருட்களால் இளைஞர்கள் சீரழிவது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் தற்போது காவல்துறை புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி67’ படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்று அந்த படத்தில் உதவி இயக்குனராகும் வாய்ப்பை பெறுபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து போதைப் பொருளுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்று இருந்ததால் இந்த இயக்குநரை முன்னிறுத்தி உள்ளது கோவை காவல்துறை.