விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' பட புது அப்டேட் வீடியோ.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பட நிறுவனம்!
பிரபல முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். விளம்பர படங்களில் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆரம்ப காலங்களில் பெரிதும் பிரபலம் அடையாத இவர், சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இவர் நடிகர் மட்டுமல்லாது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். காசி, ஜெமினி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மைல்கல்லாக அமைந்தது.
நடிப்பிற்காக தனது உடல்நிலையும் பொருட்படுத்தாது, தன்னை வருத்தி தனக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தி கொடுப்பவர். இவரது மகன் துருவ் விக்ரம், தற்போது, ஆதித்யா வர்மா, மஹான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார். 2019ம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பின்னர் மஹான் திரைப்படத்தில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அப்படமும் OTT தளத்தில் ரிலீஸ் ஆன நிலையில், அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் விக்ரமின் நடிப்பை பார்க்க பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் கோப்ரா. இதன் போஸ்டர், விக்ரம் லுக் அனைத்தும் பெரிய ஆர்வத்தை தூண்டியது. இவர் ஏற்கனவே 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’, 2018ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் கோப்ரா படத்தை இயக்குவதால் இப்படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது.
கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லலித் குமார் தயாரிக்கிறார்.
கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 31 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு தயாராக உள்ள இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனிடையே, விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். Chest discomfort காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் குறிப்பிட்டனர்.
தற்போது, படத்தின் ரிலீஸை ஒட்டி படத்தயாரிப்பு நிறுவனம் பிரபல Fully Filmy நிறுவனத்துடன் இணைந்து படத்தின் கிராபிக்ஸ் போஸ்டர் & விக்ரம் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் முகம் பதித்த உடைகளை இன்று மாலை 6 மணிக்கு அறிமுகப்படுத்த உள்ளனர். இதை பிரத்யேக அனிமேஷன் வீடியோவோடு படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.