'சிரிப்ப அடக்க முடியல.. வா ராஜா வா' பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குறித்து விக்ரம் ட்வீட் வைரல் !
பிரபல முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். விளம்பர படங்களில் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆரம்ப காலங்களில் பெரிதும் பிரபலம் அடையாத இவர், சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இவர் நடிகர் மட்டுமல்லாது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். காசி, ஜெமினி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மைல்கல்லாக அமைந்தது.
நடிப்பிற்காக தனது உடல்நிலையும் பொருட்படுத்தாது, தன்னை வருத்தி தனக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தி கொடுப்பவர். இவரது மகன் துருவ் விக்ரம், தற்போது, ஆதித்யா வர்மா, மஹான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார். 2019ம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பின்னர் மஹான் திரைப்படத்தில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அப்படமும் OTT தளத்தில் ரிலீஸ் ஆன நிலையில், அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் விக்ரமின் நடிப்பை பார்க்க பெரும் ஆர்வத்தில் இருந்தனர்.
இவர் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் பெரும் வரவேற்பை பெறாத நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுள்ளதை குறித்து ஒரு வீடியோவுடன் விக்ரம் வெளியிட்ட பதிவு செம வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமர் ஆவது இதுவே முதன்முறை. இதனால் ரிஷி சுனக்கிற்கு இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சோசியல் மீடியா வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆகி உள்ளதை இந்தியர்கள் கொண்டாடினாலும், அந்நாட்டு மக்கள் சிலர் அவர்மீது வெறுப்புடனே உள்ளனர். இது தொடர்பாக டிவி நிகழ்ச்சியில் பேசிய ஒருவர், ஒரு கருப்பினத்தவர், அதுவும் வேறு நாட்டுக்காரருக்கு எப்படி நம் நாட்டின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியும்” என கூறி இருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்திருந்த ‘தி டெய்லி ஷோ’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர், திறமை, கொள்கை ஆகியவற்றை வைத்தே ஒருவரை மதிப்பிட வேண்டுமே தவிர, அவரின் நிறத்தை வைத்து மதிப்பிடக் கூடாது’ என கூறி இருந்தார்.
இந்நிலையில், நடிகர் சியான் விக்ரம், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “இதைப் பார்த்ததில் இருந்தே என் சிரிப்பை அடக்க முடியவில்லை. மன்னிக்கவும் இதை நான் பகிர வேண்டும் என நினைத்தேன். முதலில் தமிழ் இந்தியன் அமெரிக்காவின் குடியரசு துணைத்தலைவர் ஆனார், இப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமராகி உள்ளார். வா ராஜா வா..!” என பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்தத்திலிருந்து என் சிரிப்பை அடக்கமுடியில்லை. 😉 Sorry but i have to share it. 🤣 Way to go India. 🇮🇳 First a தமிழ் Indian VP of the US. And now a British PM of Indian descent. வா ராஜா வா!! https://t.co/eGVnnT74OZ
— Aditha Karikalan (@chiyaan) October 26, 2022