விஜயகாந்த் பட கதையை திருடி.. ‘ஜவான்’ படத்தை இயக்கி வரும் அட்லீ? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!
சில படங்கள் இயக்கத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டென்ட் ஆக எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
அடுத்த படத்திலேயே விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார். அதன்படி தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ.
அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் ‘பிகில்’. இதில் நடிகர் விஜய் கால்பந்து வீரராகவும், தந்தையாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதில் வயதான தோற்றத்தில் ராயப்பனாக விஜய் வரும் கதாபாத்திரம், பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.
OTT தளமான அமேசான் ப்ரைம், ராயப்பன் கதையை வைத்து மட்டும் ஒரு முழு படம் உருவாகினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் என ட்வீட் செய்யவே, அதற்கு அட்லீ, ராயப்பன் பாணியில் “செஞ்சிட்டா போச்சு” என கூறியிருந்தார். இதனால், தளபதி68 அட்லீ தான் இயக்கப்போகிறாரா என்ற பல தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது.
இந்நிலையில், ஷாருக்கான் வைத்து அட்லீ திரைப்படம் இயக்குவது குறித்து பல தகவல் வெளியானது. இன்று, ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அட்லீ ஷாருக்கானை வைத்து படம் இயக்குவது குறித்தும், படத்தின் பெயர் ஜவான் எனவும் வீடியோவுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வித்தியாசமான லுக்கில் ஷாருக்கான் இருப்பது, அந்த தோரணை அனைத்தும், பார்க்கையில் இதுவும் அட்லீக்கு பிளாக்பஸ்டராக அமையும் என தெரிகிறது. மேலும், படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா, முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தெரிகிறது. டீசர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்ததாக சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஜவான் திரைப்படத்தின் கதை விஜயகாந்த் நடித்த பேரரசு படத்துடையது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு, ரோஜா காம்பைன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘பேரரசு’ படத்தின் கதை உரிமையை தற்போது செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணனிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ‘பேரரசு’ கதையை திருடி அட்லீ ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளதாக மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சவுத் இந்தியன் ஃபிலிம் சாம்பருக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த தகவல் கோலிவுட் மற்றும் பாலிவுட் திரை உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதனை 9ம் தேதி விசாரிக்கவும் நிர்வாகிகள் திட்டமிட்ரு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக படம் வெளியான பின்னரே படங்கள் விமர்சனத்திற்கு ஆளாகும் நிலையில், தற்போது படம் வெளியாவதற்கு முன்பே இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அட்லீ. இது குறித்து தற்போது வரை அட்லீ தரப்பில் இருந்தது எவ்வித பதிலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.