சர்ச்சையைக் கிளப்பிய 'ஆதிபுருஷ்' ட்ரைலர்.. நடிகர் பிரபாஸ் மற்றும் படக்குழுவினருக்கு கோர்ட் நோட்டீஸ் !
‘பாகுபலி’ படத்தில் வீரம் நிறைந்த அரசனாக நடித்து இந்திய திரையுலகையே ஆச்சர்யப்பட வைத்தவர் நடிகர் பிரபாஸ். தற்போது ராமாயண கதையை மையமாக வைத்து எடுப்பட்டுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக நடித்துள்ளார். பிரபாஸின் 22வது படமாக உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.
ராமராக பிரபாஸ், சீதையாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலி கான் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கில் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இது பற்றி கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. கடும் அதிருப்தியான நெட்டிசன்கள் படத்தை மோசமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். VFX கார்ட்டூன் சேனலை விட மோசமாக இருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்தனர். Animation, VFX கிராபிக்ஸ் குறித்து பல கிண்டல், கேலியான விமர்சனங்களும் வெளியாகி வருகிறது.
அது பற்றி பதில் கொடுத்த இயக்குனர் ஓம் ராவத், ‘படத்தை 3டியில் தியேட்டரில் பாருங்க. இது தியேட்டருக்காக உருவாக்கப்பட்டது. செல்போன் ஸ்கிரீனுக்காக அல்ல என தெரிவித்து இருக்கிறார். மேலும் எனக்கு வாய்ப்பு இருந்திருந்தால் youtubeல் டீசர் வெளியிடாமல் இருந்திருப்பேன் எனவும் கூறி இருக்கிறார்.
இந்நிலையில், டீசரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் குறித்து சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக சைப் அலி கான் நடித்து இருக்கிறார். படத்தில் ராவணன் கதாபாத்திரம் உண்மையான ராவணன் போல இல்லாமல் இஸ்லாமியர் போல நீண்ட அடர்ந்த தாடி, மற்றும் முடி உடன் இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
மேலும் அனுமன் கதாபாத்திரம் லெதர் பொருட்கள் அணிந்து இருப்பது போலவும் காட்டப்பட்டு இருக்கிறது. அதற்கு மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதை மாற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், ‘ஆதிபுருஷ்’ படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, இப்படத்திற்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமரையும், ராவணனையும், அனுமனையும் தவறாக சித்தரித்து இருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.