இடிந்த நிலையில் இருந்த அரசுப்பள்ளி.. நண்பனுடன் சேர்ந்து சீரமைத்து கொடுத்த கார்த்தி.. வைரலாகும் போட்டோஸ் !
அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இப்படத்தை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை,கோ, சகுனி, தோழா, மெட்ராஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களை தந்ததன் மூலம் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
கைதி, தம்பி, சுல்தான் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் 1 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குட்டி புலி படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இப்படத்தை, சூர்யா - ஜோதிகாவின் சொந்த நிறுவனமான 2D Entertainment தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் முடிவுபெற்று படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், விருமன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, ஷூட்டிங்கின் போது நடந்த விஷயம் ஒன்றை கூறினார். தேனி அருகே உள்ள கிராமத்தில் ஷூட்டிங் நடைபெற்றபோது, ஒரு மூதாட்டி வந்து, அருகில் உள்ள பள்ளியை பார்க்க வருமாறு அழைத்தாராம். அப்போது, அந்த பள்ளியை பார்த்தபோது ஷாக் ஆகிவிட்டாராம்.
ஆங்காங்கே இடிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து, அதே பகுதியில் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வரும் தனது நண்பன் மற்றும் அருகில் உள்ள சில செல்வந்தர்கள் உதவியுடன் கார்த்தி - சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனும் இணைந்து அந்த பள்ளியை சீரமைக்கும் பணியை செய்துள்ளனர்.
அவர்களின் உதவியால், அந்த பள்ளி தற்போது சூப்பராக மாறி உள்ளது. இதனை செய்துகொடுத்த கார்த்தி மற்றும் அவரது நண்பர்களுக்கு அந்த பள்ளி நிர்வாகத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர். இதையடுத்து பேசிய கார்த்தி, அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டாலும் அது சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சரியான வகையில் சென்று சேருவதில்லை. இதுபோன்று சிதிலமடைந்து கிடக்கும் பள்ளிகளை சீரமைக்க மக்கள் முன்வர வேண்டும் என கார்த்தி கேட்டுக்கொண்டார். கார்த்தியின் இந்த செயலைப் பார்த்து வியந்து நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.