அசைவத்துக்கு அடுத்த 10 நாட்கள் 'நோ' சொன்ன ஏ.ஆர்.ரகுமான்.. காரணம் இதோ !
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். அனைத்து மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்து வரும் ரஹ்மான், இசைப்புயலாக வலம் வருகிறார்.
கடந்த மாதம் இவரது இசையமைப்பில் இரவின் நிழல் படம் ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த ஆண்டின் முதல் பாதியில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் அவரின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், இந்த மாதம் அவர் இசையமைத்த விக்ரமின் கோப்ரா திரைப்படம் ரிலீசாக உள்ளது. இதன் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படம் ஏ.ஆர்.ரகுமான் கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பொன்னியின் செல்வன் இருந்து பொன்னி நதி என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரகுமானே பாடி உள்ள இப்பாடலுக்கு வெளியானது முதல் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் போட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அடுத்த 10 நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன்’ என குறிப்பிட்டு தட்டில் இருக்கும் சைவ உணவை புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தார். அசைவ பிரியரான ஏ.ஆர்.ரகுமான் திடீரென சைவத்துக்கு மாறியது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அவர் மொஹரம் பண்டிகைக்கு முந்தைய 10 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவாராம். வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் தான் அவர் தற்போது சைவத்து மாறி உள்ளாராம்.